×

எரிபொருள், மருந்துகள் இல்லாமல் காசாவில் முடங்கிய மருத்துவமனைகள்: இஸ்ரேலின் தீவிர தாக்குதலில் ஒரே நாள் இரவில் 750 பேர் பலி

ரபா: எரிபொருள், மருந்துகள் இல்லாமல் காசாவில் பெரும்பாலான மருத்துவமனைகள் முடங்கி உள்ளன. இது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை மேலும் கவலைக்கிடமாக்கி உள்ளது. மேலும் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேலால் ஒரே இரவில் 750 பேர் பலியாகி விட்டனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் நேற்று 19வது நாளை எட்டியது. காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் கடந்த இரு தினங்களாக வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த திங்கள் இரவு 400க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் போர் விமானங்கள் தகர்த்த நிலையில், ஒரே இரவில் 704 பேர் பலியாகினர். இதே போல் நேற்று முன்தினம் இரவும் நடத்தப்பட்ட தீவிர வான்வழி தாக்குதலில் 756 பேர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 7ம் தேதி தொடங்கிய இப்போரில் முதல் முறையாக அடுத்தடுத்த 2 இரவுகளில் மட்டும் 1,460 பேர் வரை பலியாகி இருப்பது தாக்குதலின் தீவிரத்தை காட்டுகிறது. அதே சமயம், இஸ்ரேல் ராணுவம் காசாவில் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தினால் இதை விட அதிகமான உயிர் பலி ஏற்படும் என்பதையும் உணர்த்தி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். இதுவரை 19 நாளில் காசாவில் பலியோனார் எண்ணிக்கை 6,546 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,704 குழந்தைகள். 17,439 பேர் காயமடைந்துள்ளனர். போரில் காயமடைந்தவர்கள் கொத்து கொத்தாக மருத்துவமனைக்கு வரும் நிலையில், அங்கு எரிபொருள், மருந்துகள் இல்லாமல் டாக்டர்கள் செய்வதறியாது உள்ளனர். எரிபொருள் முற்றிலும் காலியாகும் நிலையில் இருப்பதால், மூன்றில் ஒரு பங்கு மருத்துவமனைகள் சேவையை நிறுத்தவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இன்றி காயமடைந்தவர்கள் வெறும் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அறுவைசிகிச்சைக்காக மருந்துகள், உபகரணங்கள் இல்லாமல் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். 50,000 கர்ப்பிணிகள் நிலை இரட்டிப்பு போராட்டமாக இருப்பதாக மருத்துவ தன்னார்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மருத்துவ சேவையே முற்றிலும் முடங்கியிருப்பதால் உடனடியாக காசாவிற்கு எரிபொருள் கொண்டு வரப்படுவது அவசியம் என ஐநா வலியுறுத்தி உள்ளது. எரிபொருளை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்காவிட்டால், நிவாரண பணிகளும் முடங்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. காசாவில் மொத்தமுள்ள 23 லட்சம் மக்களில் 14 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 6 லட்சம் பேர் வரையிலும் ஐநா தங்குமிடங்களில் குவிந்துள்ளனர். தங்குமிடங்களில் 4 மடங்கு அதிக கூட்டம் நிரம்பி வழிவதால் பலரும் தெருக்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

* பணயக் கைதிகள் பற்றி தகவல் தந்தால் சன்மானம்

கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர் 220 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களில் 4 பேரை விடுவித்துள்ளனர். இந்நிலையில், காசாவில் பணயக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள ரகசிய இடம் குறித்து தகவல் தந்தால் தகுந்த சன்மானம், பாதுகாப்பு தரப்படும் என்றும், ரகசியம் காக்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ‘அமைதியாக வாழ வேண்டும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்றால் பணயக் கைதிகள் குறித்த தகவலை கொடுங்கள்’ என பாலஸ்தீன மக்களிடம் இஸ்ரேல் ராணுவம் கேட்டுள்ளது.

* ஐநா பணியாளர்களுக்கு விசா நிறுத்திய இஸ்ரேல்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. அப்போது இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கோஹென், ‘‘ஹமாசை அழிப்பது இஸ்ரேலின் உரிமை மட்டுமல்ல, எங்களின் கடமை’’ என்றார். அதற்கு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், ‘‘ஹமாசுக்கு எதிரான தாக்குதல் ஒன்றும் வெற்றிடத்தில் நடக்கவில்லை. பாலஸ்தீன மக்கள் 56 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பால் மூச்சுத்திணறி உள்ளனர். அவர்களுக்கு தரப்படும் கூட்டுத் தண்டனையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது’’ என இஸ்ரேலை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஐநா பணியாளர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

* ஹிஸ்புல்லா தலைவர் ஹமாசுடன் ஆலோசனை

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஹமாசின் மூத்த தலைவர் சலே அல் அரூரி மற்றும் இஸ்லாமிய ஜிகாத் தலைவர் ஜியாத் அல் நக்லே ஆகியோர் கூட்டாக நேற்று ஆலோசனை நடத்தி உள்ளனர். இதன் மூலம், இஸ்ரேல் காசாவில் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தினால், ஈரான் ஆதரவுடன் செயல்படும் இந்த அமைப்புகள் கூட்டாக தாக்குதலை முன்னெடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. நேற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியா ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின.

The post எரிபொருள், மருந்துகள் இல்லாமல் காசாவில் முடங்கிய மருத்துவமனைகள்: இஸ்ரேலின் தீவிர தாக்குதலில் ஒரே நாள் இரவில் 750 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gaza ,RABA ,Israel ,Dinakaran ,
× RELATED தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது...